புதுடெல்லி: பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜே.பி.நட்டா, அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த பாரதீய ஜனதா நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், ஜே.பி.நட்டாவுக்கு பொன்னாடை மற்றும் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பாரதீய ஜனதாவின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டதன் மூலம், அக்கட்சியின் தலைவராக அமித்ஷா தொடர்வார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமித்ஷா தற்போது மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

பாரதீய ஜனதா கட்சியின் விதிமுறைப்படி, ஒருவர் ஒரு பதவியில்தான் இருக்க வேண்டுமென்பது விதிமுறை. அதன்படி, மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அமித்ஷா, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கட்சியின் செயல் தலைவராக மட்டுமே ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம், அமித்ஷா தொடர்ந்து தனது தலைவர் பதவியில் நீடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.