அதானி குழுமத்திற்குச் சொந்தமான 4 நிறுவனங்களில் இருந்து ரூ. 620 கோடி கடன் வாங்கி அதானி பவர் நிறுவனத்துக்கு ரூ. 608 கோடி கடன் வழங்கியதில் விதிமீறல் நடைபெற்றதாக அந்நிறுவன இயக்குனர் முகேஷ் ஷா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பங்குசந்தையில் பதிவு செய்யப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தவிர பல தனியார் நிறுவனங்களையும் துணை நிறுவனங்களாக அதானி குழுமம் நடத்தி வருகிறது.

இதில் அதானி லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அதானி எஸ்டேட்ஸ் ஆகிய பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் மற்றும் அதானி என்டர்ப்ரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் என அதானி குழுமத்திற்குச் சொந்தமான மொத்தம் நான்கு நிறுவனங்களிடம் இருந்து 620 கோடி ரூபாயை அதிகார்ப் பினான்சியல்ஸ் என்ற தனியார் நிறுவனம் வாங்கியுள்ளது.

2020 ம் ஆண்டு வாங்கிய இந்த தொகையில் ரூ. 608 கோடியை அதே ஆண்டு அதானி பவர் நிறுவனத்திற்கு அதிகார்ப் பினான்சியல்ஸ் கடனாக வழங்கியுள்ளது.

அதானி குழுமத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான இந்த அதிகார்ப் பினான்சியல்ஸ் நிறுவனத்தின் ஆடிட்டராக இருப்பவர் முகேஷ் ஷா. இவர் முகேஷ் ஷா அண்ட் கோ என்ற பெயரில் தணிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

முகேஷ் ஷா

அதேவேளையில் அதானி பவர் நிறுவனத்தின் இயக்குனராகவும் செயல்பட்டு வரும் முகேஷ் ஷா தான் ஆடிட்டராக இருக்கும் ஒரு நிறுவனத்தில் இருந்து பொதுத்துறை நிறுவனத்திடம் இருந்து பெற்ற பணத்தை கடனாக வாங்கி இருப்பது விதிமீறல் என்று கூறப்படுகிறது.

அதிகார்ப் பினான்சியல்ஸ் நிறுவனம் வாங்கிய 620 கோடி ரூபாய் பணத்தில் அதானி என்டர்ப்ரைசஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 11.8 கோடி ரூபாயும், அதானி போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 57.2 கோடி ரூபாயும் பெறப்பட்டுள்ளது.

தவிர அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 543.1 கோடியும் மற்றும் அதானி எஸ்டேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 10.1 கோடியும் வாங்கியுள்ளது.

இந்த பணம் முழுவதும் எதற்காக கடனாக வாங்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்ற போதும் அதே ஆண்டு அதானி பவர் நிறுவனத்துக்கு கடனாக வழங்கி இருப்பது மோசடியில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரமாகவே கருதப்படுகிறது.

2020 ம் ஆண்டு அதிகார்ப் பினான்சியல்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ. 64.3 கோடி என்றும் நிகர லாபம் ரூ. 68.6 லட்சம் என்றும் வருமான கணக்கு சமர்ப்பித்துள்ள இந்த நிறுவனத்துக்கு 620 கோடி ரூபாய் கடன் வழங்கியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேலும், 2020 ம் ஆண்டுக்குப் பிறகு அதிகார்ப் பினான்சியல்ஸ் நிறுவனம் நஷ்ட கணக்கை காட்டியுள்ளதையடுத்து இந்த நிறுவனம் மற்றும் முகேஷ் ஷா ஆகியோர் மீது புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அதேவேளையில் 2019 ம் ஆண்டு அதிகார்ப் நிறுவனம் அதானி குழுமத்திற்குச் சொந்தமான வேறு சில நிறுவனங்களிடம் இருந்து ரூ.
553.28 கோடி கடனாக வாங்கியுள்ளது.

தவிர இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் தொகை குறித்து அதானிக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் தணிக்கை அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது.

பங்கு சந்தையில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சுமத்திய நிலையில் நிதி மோசடி குறித்த ஆதாரங்களைக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு அமைதிகாப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.