திருவனந்தபுரம்; மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளாவில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல கேரள மாநிலத்தின்,  கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுப்பு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி (நாளை) கொண்டாடப்பட வருகிறது. இந்த நிலையில், பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில்,  கேரள மாநில அரசு பல்வேறு அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே 100 சதவிகிதம் கல்வி அறிவுபெற்றுள்ள கேரள மாநிலத்தில், பாலின சமத்துவம், சீருடையில் பேதம் தவிர்ப்பது, சமூக நீதி என  நடவடிக்கைகைளை எடுத்து, இந்தியாவுக்கே முன்னோடி யாக திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில்தான், கேரள மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையான, கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. முன்னதாக,  இதுதொடர்பாக கேரள பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட் கூட்டத்தில் நடத்தப்பட்ட  ஆலோசனை கூட்டத்தில்,   கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி  கேரள மாநில கல்லூரிகளில் படிக்கும்  மாணவிகள் பருவ தேர்வு எழுத அவர்களுக்கு 73 சதவீத வருகை பதிவு இருந்தால் போதும் என்று பல்கலைக் கழகம் அறிவித்து உள்ளது.

இதுபோல கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாத காலம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்பு முடிந்து கல்லூரியில் சேரும் போது மருத்துவ சான்று சமர்ப்பிக்க வேண்டும். அதனை கல்லூரி முதல்வர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சிண்டிக்கேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதல் முறையாக பல்கலைக்கழக மாணவிகள் தங்களின் மகப்பேறு நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை கேரளா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.  ஒவ்வொரு செமஸ்டர் தேர்வு எழுத மகப்பேறு விடுப்பு எடுக்கும் மாணவர்களுக்கு 76 சதவீத வருகை பதிவு இருந்தால்  போதும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய கேரளா பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர், ”உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மகப்பேறு விடுப்பு முடிந்து மாணவர்கள் மீண்டும் தங்கள் வகுப்புகளை தொடங்க அனுமதிக்கப் படுவார்கள்.

மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் சேர விரும்பும் மாணவர்கள், தங்களின் மருத்துவ சான்றிதழ்களை கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ சான்றிதழ்கள் நிர்வாகத்தால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் மீண்டும் வகுப்பில் சேர அனுமதிக்கப்படும்” என்றார்.

முன்னதாக, ஜனவரி மாதத்தில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது. வருகைப் பதிவேட்டில் குறைபாடு ஏற்பட்டிருந்தாலும், மாதவிடாய் விடுப்புக்கு பிரச்சனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு செமஸ்டர் வகுப்புக்கும் 2 சதவீத கூடுதல் விடுப்பு, மாதவிடாய் நாட்களுக்காக ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது 75 சதவீத வருகைப் பதிவேட்டைக் கொண்டு இருப்பவர்கள் மட்டுமே செமஸ்டர் தேர்வை எழுத முடியும். அதைவிடக் குறைவான வருகைப் பதிவேடு கொண்டிருப்பவர்கள் துணை வேந்தருக்குக் கடிதம் எழுதவேண்டியது கட்டாயம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கேரள அரசின் உயர்கல்வித்துறை, அரசு துறையுடன் இணைந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுப்புக்கான நாட்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.