சென்னை; வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக உள்ளது என பீகார் மாநில அதிகாரிகள்குழுவினர் தெரிவித்தனர். முன்னதாக பீகார் குழுவினர் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்த நிலையில், இன்று காலை தலைமைச்செயலாளர் இறையன்புவை சந்தித்து பேசினர்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகள் அண்மையில் பரவியதால் வடமாநிலத்தவர்கள் வேலை செய்யும் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகிறது. இந்த விவகாரம் வடமாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

பீகார் ஆய்வு குழு : இந்நிலையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவின் பெயரில், பீகார் மாநில அரசு அதிகாரிகள் தமிழகம் வந்து திருப்பூர், கோவை, சென்னையில் உள்ள வடமாநிலத்தவர்களிடமும், அங்குள்ள தொழிற்சாலை நிறுவன அதிகாரிகளுடனும் கருத்துக்களை கேட்டறிந்தனர். இன்று சென்னை வந்து, தலைமை செயலகத்தில் தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சிறப்பு பணி படை வீரர் சூப்பிரண்டு சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை பீகார் குழுவினர்,  திருப்பூர், கோவை, சென்னையில் உள்ள அரசு உயர் அதிகாரிகளிடம் தற்போது உள்ள நிலை குறித்து கேட்டறிந் தோம், தொழிற்சாலையில் உள்ள நிர்வாகிகளிடம் தொழிலாளர்களின் நிலை குறித்து கேட்டறிந்தோம் என்றவர்கள்,  வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக இருந்தது என குறிப்பிட்டனர்.

பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் ஐஏஎஸ் அளித்த பேட்டியின்போது,  “அதிகாரிகள் மட்டுமின்றி தொழில்துறை பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினோம். கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்துள்ளோம். கோவை, திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசினோம். எவ்வித குழப்பமும் இல்லை. திருப்பூரில் 3 இடங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். தொழிலாளர்களின் அனுமதியுடன் அவர்களது செல்போன்களையும் ஆய்வு செய்தோம். பீகாரில் இருந்து வந்து 30 ஆண்டுகள், 15 ஆண்டுகளாக பணிபுரிபவர்களும் உள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை எங்களுங்ககு  திருப்திகரமாக உள்ளது.

சென்னையில் இன்று பீகார் மாநில அசோசியேஷன் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பாதிப்பு உள்ளதா என கேட்டோம். அந்த வீடியோ வந்தவுடன் தமிழ்நாடு அரசு வேகமாக செயல்பட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எங்களுக்கு தமிழக அரசு அதிகாரிகள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ‘வீடியோ பார்த்து கொஞ்சம் பயம் இருந்தது. ஆனால் இப்போது அந்த பயம் நீங்கி விட்டது. எல்லாம் தெளிவாகிவிட்டது. அது போலி வீடியோ, நம்ப வேண்டாம் என்று தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்பதை அவர்களுக்கு தெரிவித்து இருக்கிறோம். பீகார் அரசு சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என தெரிவித்தார்.

நாங்கள் இந்த ஆய்வின்போது பீகார் மாநில தொழிலாளர்களிடம் பெற்ற தகவல்களை முழு அறிக்கையாக தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.  கடந்த 3 நாட்களாக நடந்த ஆய்வுக்கு பிறகு இன்று பீகார் புறப்பட்டு செல்கின்றனர்.