சென்னை:  “புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி பகுதியில்உள்ள பட்டியலின மக்களுக்கான ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த விவகாரம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே வேங்கை வயல் குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், ஓராண்டை கடந்தும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது அதே புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது. பட்டியலினத்தோருக்கு எதிரான வன்கொடுமை களைத் தடுப்பதில் திமுக அரசு தொடர்ந்து படுதோல்வி அடைந்து வருகிறது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம் கலக்கப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சங்கம் விடுத்தி பஞ்சாயத்து ஆதி திராவிடர் குடியிருப்பு காலனியில் 2014-ம் ஆண்டு குடிநீருக்காக 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட OHT அமைக்கப்பட்டது.  இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலக்கப்பட்டுள்ளது. இது  அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் ரவிக்குமார் (37) என்பவருக்கு குடிநீர் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் அருகிலுள்ள திருவோணம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் வழக்கம் போல்  மீண்டும்  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீரில் மாட்டு சாணம் கலந்து வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ஆதிதிராவிடர் தெருவில் இருக்கும் இளைஞர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் மாட்டு சாணம் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, இதுதொடர்பாக கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஆணையர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், கல்லாக்கோட்டை வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, கிராம நிர்வாக அலுவலர் சுபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆணையர், பொதுமக்களிடம் இது குறித்து முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் தொட்டியில் இருந்த மாட்டு சாணத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி மாட்டு சாணம் தானா என கண்டறியப்படும்.

அது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் விநியோகம் செய்ய ஆணையர் உத்தரவிட்டார். வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, இதுதொடர்பான அறிக்கையை தாசில்தார் விஜயலட்சுமிக்கு அனுப்பி வைத்தார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. வேங்கைவயலைத் தொடர்ந்து பல இடங்களில் குடிநீர் தொட்டிகளில் பல்வேறு பொருட்கள், இறந்த பறவைகள் போன்றவை காணப்படும் நிலையில், தற்போது சாணம் கலந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது.

மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகையக் கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு கூறி உள்ளார்.

“புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓராண்டுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வரும் வேங்கைவயல் விவகாரம்: தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு…