சென்னை:  கிண்டி  அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கில், பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளிக்க கோரி கோட்டூர்புரம் காவல்துறை  சில கேள்விகளை எழுப்பி கடிதம் கொடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் பிரபலமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அண்ணா பல்கலைக்கழகம் பெயரில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், திரையுலகைக் சேர்ந்த நடன இயக்குநர் சாண்டி, சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி – சுதாகர் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

இந்த பட்டம் போலியானது என தெரிய வந்ததால், கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பலரும், அதிர்ச்சி அடைந்தனர்.  இது தொடர்பாக ஓய்வுபெற்ற நிதிபதி வள்ளி நாயகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில்,  தறைமறைவாக இருந்த   நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி டாக்டர் பட்டங்கள் ரூ,25000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. மேலும்,  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் டாக்டர் பட்டம் வழங்குவது போன்று பொது நிகழ்ச்சி நடந்துள்ளதும், இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் உடந்தையாக இருந்ததும் போலீசார்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு 10 கேள்விகள் கொண்ட ஒரு கடித்தை கோட்டூர்புரம் போலீசார் அளித்துள்ளனர். அந்த கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்க வேண்டும் என கோட்டூர்புரம் போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளிக்கும் பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலர் போலி டாக்டர் பட்டம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.