திருச்சி:  தி.மு.க வெறுப்பு பிரச்சாரங்களை ஒரு போதும் செய்யாது, விருப்பு பிரச்சாரங்களை மட்டுமே செய்யும் என்றும், ஈரோடு வெற்றியை திசைதிருப்பவே வட மாநிலத்தவர்கள் குறித்து  வதந்தி பரப்பப்படுகிறது என்றும்  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமானநிலையத்தில் செய்தியளார்களை சந்தித்த   நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல. அது மத்திய அரசு திட்டம். அத்திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு மு னைப்பு காட்ட வில்லை என்று குற்றம் சாட்டியவர்,  மத்திய அரசு மற்றும் உலக வங்கி மூலம் நிதி பெற்றால் மட்டுமே இந்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த முடியும்.

எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், ஆளும் கட்சியாக மாறும் போது ஏற்கனவே இருந்த கட்சி தொடக்கிய திட்டங்களை முடக்க கூடாது. அது ஜனநாயகம் அல்ல. அதனால் தான் அ.தி.மு.க தொடக்கிய திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்தாமல் செயல்படுத்துகிறது. ஆனால் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தி.மு.க தொடக்கிய திட்டங்களை முடக்கி விடும் என்றவர்,

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் மீதான தாக்குதல் நடத்தப்படாமலேயே நடத்தப்பட்டதாக கூறுவது, ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் வெற்றியை திசை திருப்பும் நடவடிக்கை என்றார். மேலும்,   எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என முதல்வர் விடுத்த அறிவிப்பை மக்கள் மத்தியில் இருந்து திசை திருப்பவும், சிலர் செய்த சிறுபிள்ளைதனமான வதந்தி பரப்புகின்றனர். திமுக ஒருபோதும் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடாது, விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும் என்றும் கூறினார்.