டில்லி

இந்தியா ஒமிக்ரானுடன் போராடத் தயாராக உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி அளித்துள்ளார்

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.  இந்த வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது.  இதுவரை சுமார் 161 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து நேற்று மாநிலங்களவையில் விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தின் போது மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “மத்திய அரசு நாட்டில் ஒமிக்ரான் பரவலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.  ஏற்கனவே இந்த தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கி விட்டது. இந்தியா ஒமிக்ரானை எதிர்த்துப் போரிடத் தயாராகவே இருக்கிறது.

அரசு இந்த தொற்று தொடர்பாக மாநிலங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.  ஒமிக்ரான் தொடர்பாக எத்தகைய நெருக்கடியையும் சமாளிக்க மருந்து மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. மாநிலங்களுக்கு மேலும் 48 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன.

அடுத்த 2 மாதங்களில் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை மாதத்துக்கு 45 கோடி என்ற அளவுக்கு உயர்த்தப்படும்.  இதுவரை நாடு முழுவதும் 88 சதவீத பயனாளிகள் முதல் டோசும், 58 சதவீதத்தினர் 2வது டோசும் போட்டு உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.