புதுடெல்லி: அதிநவீன ஏவுகணையாகக் கருதப்படும் ‘ஹைபர்சானிக்’ வகை ஏவுகணையை தயாரிக்கும் முயற்சியில், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ களமிறங்கியுள்ளது என்று தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த வகை ஏவுகணையானது அடுத்த தலைமுறை ஆயுதம் என்று ராணுவ நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. எனவே, இந்தப் பிரசித்திப் பெற்ற ஆயுதத்தை தயாரிக்கும் முயற்சியில் டிஆர்டிஓ களமிறங்கியுள்ளது.

இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விரைவில் துவக்கி வைக்கவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்தவகை ஏவுகணைகளின் சிறப்பு என்னவென்றால், இது ஒலியை விடவும் 4 மடங்கு வேகமாக செல்லக்கூடியதாகும். மேலும், தற்போது உலகில் நடைமுறையில் உள்ள வேறு எந்த நவீன ஏவுகணைகளாலும் இதை தாக்கி அழிப்பதென்பது இயலாத காரியம்.

இந்த வகை ஏவுகணையை தயாரிக்கும் முயற்சியில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஈடுபட்டுள்ளன என்பதும், தற்போது இந்தியாவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.