சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீடு உள்பட தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அவ்வப்போது மத்தியஅரசின் கீழ் உள்ள அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் திமுக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறையைக் கொண்டு முன்னாள் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று வருமான வரித்துறையினர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர்  வீடு உள்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர்  காசி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவர் செந்தில் பாலாஜியிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார். TANGEDCO-விற்கு ஒப்பந்தம் அளித்ததில் நடந்த முறைகேடு மற்றும் மணல்குவாரிகளில் நடைபெற்ற போலி பில் முறைகேடு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில்  அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் பல்வேறுகட்ட சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும்,  செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.  30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும்,  வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தொழிலதிபர்களை மையப்படுத்தி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்  வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் அமலாக்கத்துறையினர், மணல்குவாரிகள் மற்றும் அதன் காண்டிராக்டர்கள், கனிவளத்துறை அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்திய நிலையில், தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.