திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்குள் மொபைல் போன், காமிரா உள்பட புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனைகளை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது மொபைல் போனை ரூ.5 கட்டணம் செலுத்தி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு,  தரிசனம் முடிந்த பின்பு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழனி. பழனி மலைமீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.  இங்கு தினசரி பல ஆயிரம் பக்தர்கள் வந்து முருகனின் அருள்பெற்று செல்கின்றனர்.

சமீபத்தில்,  பழனி முருகன் கோயில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் ச இணையத்தில் வைரலானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பழனி முருகன் கோவிலுக்குள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் மொபைல் போன் கேமரா கொண்டு செல்ல தடை  விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது மொபைல் போனை ரூ.5 கட்டணம் செலுத்தி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு, பின்னர் தரிசனம் முடிந்த பின்பு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தவறுதலாக தங்கள் செல்போன்கள் மற்றும் கேமராக்களை கொண்டு வருபவர்கள் மலைக் கோயிலுக்கு செல்லும் படிப்பாதை, ரோப் கார் மற்றும் வின்ச் ஆகிய நிலையத்தில் அமைக்கப்படவுள்ள மொபைல் போன் பாதுகாப்பு மையத்தில் செல்போன்களை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.