சென்னை: மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியை விமர்சித்ததாக கூறி, தமிழ்நாடு காவல்துறை, பிரபல எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரிமீது வழக்கு பதிவு செய்து கைது செய்த நிலையில், அவர்மீது பதியப்பட்ட காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில், யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக பிரபல பதிப்பாளரும், எழுத்தாளருமான   பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டிருந்தார். பத்ரி சேஷாத்ரி மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்துறையில்  திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில்,   காவல் துறையினர் கடந்த ஜூலை 29 -ம் தேதி அதிகாலையில்பத்ரி சேஷாத்ரியை கைது செய்தனர்.

அவர்மீது, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் தூண்டுவது, மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை ஏற்படுத்துவது மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்வது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள் வெளியிட்டது என 3 பிரிவுகளில், பத்ரி சேஷாத்ரி  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீது  காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

தமிழ்நாடு அரசின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதுபோல, பத்ரி சேஷாத்ரி கைதுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பத்ரி சேஷாத்ரி-க்கு குன்னம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.   இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்ற வந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம் பத்ரி சேஷாத்ரி மீது, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து  உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் நடவடிக்கை தமிழ்நாடு காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.