மேட்டூர்: தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், மேட்டூர்  அனல் மின் நிலையத்திலும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது பல அமைச்சர்களின் உதவியாளர்கள், சொந்த பந்தங்கள், காண்டிராக்டர்கள், அரசு அதிகாரிகள், அரசு அலுவலகங்கள் என  பல பகுதிகளில் சோதனை நடத்தியது. இதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், இன்று சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில்,  வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அனல்மின் நிலையம்,  வெள்ளி வாயில் சாவடியில் உள்ள  ராதா இன்ஜினியரிங் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனை  நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிறுவனமே,  மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு  ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்துள்ளது.

 தற்போது மேட்டூர்  அனல் மின் நிலையத்தில் 850 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், மின் சாதன பொருள்கள் வாங்கியதில் வருமானவரி ஏற்பு செய்ததாகவும், ஒப்பந்த பணியாளர்களை பணி அமர்த்தியதிலும் ஊதியம் வழங்குவதிலும் பெரும் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடப்பதாக அனல் மின் நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 7:30 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பணி ஆட்கள் நியமனம்  ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் கோப்புகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் விலை மற்றும் தரம் குறித்தும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதே போல தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் 3 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனல் மின் நிலையம் வரை கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. மேட்டூரை அடுத்து தூத்துக்குடியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.

தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்தம் பெறுவது தொடர்பாக தனியார் நிறுவனம் ஒன்று அதிக பொருட்செலவில் மிகப்பெரிய மது விருந்து ஒன்றை நடத்தியதும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்தே இன்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை தொடங்கி தூத்துக்குடி வரைக்கும் மிகப்பெரிய சோதனையை நடத்தி வருகின்றனர். இதில் சிக்கும் தகவல்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் மீதான பிடி மேலும் இறுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.