சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பின் நாள்தோறும் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது அமமுக தலைவர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரு நாட்களுக்க முன்பு திருநெல்வேலி அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான ஆட்டோ டிரைவர் விஜயகுமார் என்பவர் மேலச்செவல் – கரிசல் சாலையில் மழை நீர் கால்வாய் ஓடை அருகே சென்றபோது, ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட நபரின் உடலை வாங்க மறுத்து அவரது சொந்தங்கள் மற்றும் ஊரார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் திரு. விஜயகுமாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. வழக்கமான பணியை முடித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத கும்பலால் திரு. விஜயகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  எனவே, கொலைக்குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, திமுக ஆட்சிக்கு வந்த பின் நாள்தோறும் கொலை, கொள்ளை என தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்துமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் கொலை நகரமாக மாறியது நெல்லை – பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை.. 

தமிழ்நாட்டின் கொலை நகரமாக மாறியது நெல்லை – பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை..