மதுரை: முன்னாள் திமுகவின் தென்மண்டல பொறுப்பாளரான மு.க.அழகிரி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில்,  நான் பாஜகவில் சேரவில்லை என்றும், இது தொடர்பாக வெளியாக செய்திகள் வதந்தி என்றும்  மு.க.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு காலத்தில், திமுகவின் தென்மண்டல பிரதிநிதியாக இருந்து தென்மாவட்டங்களை தனது கைக்குள் வைத்திருந்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. ஆனால், அவர்மீது திமுகவினராலேயே குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதால்,  கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக 2014 ல், தனது தந்தை கருணாநிதியால்திமுக-விலிருந்து நீக்கப்பட்டார்  மு.க.அழகிரி.  இதற்கு மு.க.ஸ்டாலின் காரணம் என கூறப்பட்ட நிலையில், அவர் மீண்டும்கட்சிப் பணியில் ஈடுபடவும், திமுகவில் இணைக்கவும் ஸ்டாலின் தலைமையிலான  திமுக மறுத்துவந்தது.

இந்த நிலையில், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில், பல கட்சிகளில் இருந்து அதிருப்தியாளர்களை வளைத்துப்போடும் மாநில பாஜக தலைமை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரிக்கும் வலைவீசியது. இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், அமித்ஷா தமிழக வருகையின்போது, அவர் பாஜகவில் இணையக்கூடும் என சமுக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த  மு.க.அழகிரி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் முருகன் கூட என்னை பிஜேபியில் சேருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.  அதற்காக அவருக்கு நன்றி கூறுகிறேன். ஆனால் நான் பாஜகவில் சேரவில்லை.  பாஜகவில் சேருவது பற்றி வெளியாகும் செய்திகள் எல்லாம் ஒரு வதந்தி என்று மறுப்பு தெரிவித்தவர், இது தொடர்பாக நான் தமிழகம் வரும் அமித்ஷாவையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், தனிக்கட்சி தொடங்குவது குறித்தோ, எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை, தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து  நல்ல முடிவு எடுப்பேன் என்றும் தெரிவித்து உள்ளார்.