சென்னை: சென்னை மக்களுக்கு அச்சுறுத்தை ஏற்படுத்தி வரும் செம்பரம்பாக்கம் உள்பட தமிழகத்தின் முக்கிய அணைகளின் நீர்வரத்து, நீர்த்தேக்கம் குறித்து அரசு அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் பருவமழை தீவரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  தொடர்பாக, அவசரகால வெள்ளத்தடுப்பு உதவி எண்கள் அடங்கிய கையேட்டை வெளியிட்ட அமைச்சர் உதயக்குமார்,  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   ” தமிழகத்தில் இயல்பு நிலையை விட 40 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்துள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 36 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளை வழங்கும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்
மேலும், சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழுக்கொள்ளவை எட்டி வரும் நிலையில்,   பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்று கூறிய அமைச்சர், அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,  அனைத்து அணைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.