சென்னை

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் மத்திய அரசைக் கடுமையாகச் சாடி உள்ளார்.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் விதிமுறைகளை மீறி நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு கிடைக்க உதவியதாக முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் மீது வழக்குப் பதியப்பட்டது.  அதையொட்டி அவரைக் காவல் செய்த சிபிஐ அவரை சிறையில் அடைத்தது.   சுமார் 106 நாட்கள் சிறையில் இருந்த அவர் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.   ஜாமீனில் வந்த பிறகு முதல் முறையாக அவர் நேற்று சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சிதம்பரத்தைச் சந்தித்த போது அவர், “நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. உத்தர பிரதேச மாநிலம், பெண்களுக்கான கொலைக்களமாக மாறிவருகிறது. இதைத் தடுக்கவேண்டியது பெண்களும், அரசும் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆணும் தான் இதில் பொறுப்பாளி

இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.. தொடர்ந்து, இதைப் பற்றி நாட்டு மக்களுடன் பேசுவேன்.  2004 – 2010 வரை 8.5 சதவீத பொருளாதார வளர்ச்சி இருந்தது. இடையே 9 சதவீத வளர்ச்சியைக் கூட எட்டியது. பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், இது கூட அவர்கள் சொல்லும் பொய்யான புள்ளிவிவரம் தான். பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் பொருளாதார மந்த நிலையிலிருந்து நாட்டை மீட்க முடியும் என எனக்கு தோன்றவில்லை.

பாஜக ஆட்சியில், நாட்டில் சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. நான் சிறைவாசத்திற்குப் பிறகு சுதந்திர காற்றைச் சுவாசிக்கிறேன். ஆனால் நாட்டில் பல பகுதிகளில் மக்களுக்கு சுதந்திரம் இல்லையே. இப்போதும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 75 லட்சம் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. நமது நாடு, சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய வலதுசாரி பிற்போக்கு பாசிச ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழக மக்கள், பாஜக மீது காட்டுகின்ற எச்சரிக்கை உணர்வை எப்போது இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் உணர்கிறார்களோ அப்போதுதான் உண்மையிலேயே இந்தியா சுதந்திர நாடாக மாறும். பாஜக எதிர்ப்புணர்வு மற்ற மாநிலங்களுக்கும் பரவவேண்டும். என் மன உறுதியைக் குலைப்பதற்காகத்தான் என்னைச் சிறையில் அடைத்தார்கள். ஆனால், என்னுடைய மன உறுதியை ஒருபோதும் குலைக்க முடியாது. என்னுடைய உடல்நலத்தை குலைக்க வேண்டுமென நினைத்தார்கள். நீதிமன்றத்தின் தலையீட்டால் என்னுடைய உடல்நலத்தை மீட்டெடுத்துள்ளேன்.

பாஜகவில் இணைந்த பலரும் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.   பாஜக என்பது கங்கை நதி எனவும் அதில் குளித்தால் பாவங்கள் மறையும் என அவர்கள் சொல்கின்றனர்.  நான் ஒரு போதும் அந்த கங்கையில் குளிக்க மாட்டேன்  நான் நீதிக்கும் நியாயத்துக்கும் மட்டுமே தலை வணங்குவேன் அநியாயத்துக்கு வளைய மாட்டேன்.  தேசிய கவி பாரதியார் சொன்னது போல் நான் வீழ்வேன் என நினைத்தாயோ?

மற்றவர்கள் போல நான் வளையவோ விழவோ மாட்டேன்.  உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், நமக்குச் சுதந்திரத்தை பெற்றுத் தந்த காங்கிரஸ் கட்சி,  சுதந்திர வீரர்களான காந்தி, நேரு, திலகர், சர்தார்  படேல், காமராஜர் ஆகியோர் நினைவு நிலைத்திருக்கும் போது நான் வீழ்வேன் என நினைத்தீர்களா? இல்லை ஒருக்காலும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.