நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் வேலைக்கு விண்ணப்பித்த ராமநாதபுரம் காவலர்

Must read

 

ராமநாதபுரம்: நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்கு தாம் தயாராக இருப்பதாக தமிழ்நாடு ராமநாதபுரத்திலுள்ள காவலர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.

அவரது பெயர் சுபாஷ் சீனிவாசன் (வயது 42). ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமை காவலராக பணியாற்றுகிறார்

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் ஆகியோரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்தனர். சிறுவனுக்கு சிறார் நீதி சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மற்றொரு குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்ற 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இந்த நிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி திகார் சிறையில் ஆள் இல்லை என்ற தகவல் வெளியானது.

இந்த பணிக்கு நான் தயார் என இவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திகார் சிறையின் தலைமை இயக்குநருக்கு அவர் கடிதமும் அனுப்பி உள்ளார்.

அவர் திகார் சிறை அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேரை தூக்கிலிட திகார் சிறையில் ஆள் இல்லை என்பதால், தண்டனை தள்ளிப்போவதாக செய்திகள் வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அந்தப் பணியை செய்ய விருப்பம் தெரிவிக்கிறேன்.

ஏட்டு சுபாஷ் சீனிவாசன் தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, அனாதை பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அண்ணா பதக்கம் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் விருதுகளையும் பெற்றுள்ளார்.

More articles

Latest article