லக்னோ: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு  தடுப்பூசி தயாரித்து வழங்கும், சீரம் நிறுவனத்தின் தலைமை  அதிகாரி பூனவல்லா, தானும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை பயனர்களுக்கு செலுத்த மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி,  முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார்.

இதையடுத்து,  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த நிலையில, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  அடர் பூனாவாலா, தனது நிறுவத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை இன்று தனது உடலில் செலுத்திக்கொண்டார்.

இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி பெற இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும், இந்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சியில் தனது நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அவர், அதன் பாதுகாப்பையும், நம்பகத்தன்மையும் உறுதிப்படுத்த, தான் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.