மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற ஜோதிர்லிங்க ஸ்ரீ மஹாகாளேஷ்வர் கோயிலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

இன்று காலை நடைபெற்ற பஸ்ம ஆரத்தியின் போது கோயில் கருவறையில் மஹாகாளேஷ்வர் சிலை மீது பூசாரிகளும் பக்தர்களும் வண்ணப் பொடிகளை தூவி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

அப்போது கோயில் பூஜாரி ஒருவர் ஆரத்தி காட்டிய நிலையில் வண்ணப் பொடி மீது தீப்பொறி பட்டதில் கருவறையில் திடீரென தீப்பற்றியதுடன் திரைசீலைகள் உள்ளிட்டவற்றில் தீ பரவியதால் கருவறையில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் திணறினர்.

இதனால் கருவறையில் இருந்த கோயில் பணியாளர்கள் உட்பட சுமார் 13 பேர் தீக்காயம் அடைந்தனர். இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்ணப் பொடியில் ரசாயனம் கலந்திருக்க வாய்ப்பிருப்பதால் அது எளிதில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த பூஜையின் போது ம.பி. மாநில முதல்வர் மோகன் யாதவின் மகன் வைபவ் யாதவும் கலந்துகொண்டுள்ளார். அதிர்ஷ்டவசமாகஅவர் இந்த விபத்தில் இருந்து தப்பியுள்ளார்.