டெல்லி: கேரளாவில் 22 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும், தமிழ்நாடு புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. குஜராத் சுத்ரபாடா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 54 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும், குஜராத் மாநிலம் வெராவல் பகுதியில் 52 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமம் அடைந்து வருகிறது. அதுபோல வட மாநிலங்களிலும் மழைக்காலம் தொடங்கி, மழை பெய்து வருகிறது. இதனால் கேரளா, தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதாகவும் இதன் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்  அதனால், ஜூலை 22ஆம் தேதி வரை கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் 21ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் ஒர் வாரம் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது சென்னையை பொருத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காண ப்படும் இடங்களில் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் 24ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.  இதனால், கர்நாடகா, கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது