டெல்லி: மத்தியஅரசு தடுப்பூசி கொள்கையை மாற்றிய நிலையில்,  மக்களின் தேவைக்காக மத்திய அரசு 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. அதன்படி,  25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்கிறது.

கொரோனா தொற்றின் 2வது அலையின் தீவிர தாக்கம், தடுப்பூசி பற்றாக்குறை, தடுப்பூசி விலை மாறுபாடு, உச்சநீதிமன்றம் விமர்சனம் போன்றவைகளால், மத்தியஅரசு தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.  அதன்படி, மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் மத்தியஅரசிடம் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.  மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஜுன் 21ம் தேதி முதல் தடுப்பூசி இலவசம் என்றும் அவர் அறிவிப்பை வெளியிட்டார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி அயோக்கின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் வி.கே.பால், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 44 கோடி தடுப்பூசி மருந்து வாங்க மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. அதன்படி, சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 25 கோடி கோவிஷீல்டு தடுப்பு ஊசியும்,  ரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மருந்து 19  கோடி டோஸ் வாங்க மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.

மேலும்,  30 கோடி பயோலாஜிக்கல்-இ தடுப்பூசியும் செப்டம்பருக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பயோலாஜிக்கல்-இ நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி வாங்க ரூ.1500 கோடி மத்திய அரசு செலுத்தி உள்ளது. மூன்று நிறுவனங்களும் இருந்து கொள்முதல் செய்யும் 74 கோடி டோஸ் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை டிசம்பர் இறுதி வரை இரு நிறுவனங்களும் சப்ளை செய்யும். தடுப்பூசிக்கான 30 சதவீத தொகையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கி விட்டதாக கூறியவர்,  மேலும், 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன என்று கூறினார்.