டெல்லி: செல்வ மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். இதையடுத்து, 2021-2022 நிதி ஆண்டின் முதல் காலாண்டு வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் இருப்பு வைத்திருக்கும் சேமிப்புக்கு மார்ச் 31ம் தேதி வரை ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனி ஏப்ரல் மாதம் முதல் அது 3.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் 5.5 சதவீதத்திலிருந்த 0.10 சதவீதம் குறைத்து 4.4 சதவீதமாகவும், 2 வருட டெபாசிட் திட்டத்தின் வட்டி விதம் 5.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 3 வருடம் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதம் 5.5 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாகவும்,  5 வருட டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ரெக்கரிங் டெபாசிட் என அழைக்கப்படும் 5 ஆண்டு தொடர் வைப்பு நிதி திட்ட வட்டி விகிதம் 5.8 சதவீதத்திலிருந்து 5.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 7. 4 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகவும், மாத வருமான கணக்கின் வட்டி விகிதம் 6.6 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தின் வட்டி விகிதம் 6.8 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிபிஎப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரத்தின் வட்டி விகிதம் 6.9 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாக குறைத்தும், முதிர்வு காலம் 124 மாதங்கள் என்பது 138 மாதங்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுகன்யா சம்ரிதி யோஜனா என்றழைக்கப்படும் செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது குறைக்கப்பட்டு உள்ள வட்டி விகிதங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.