கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின் அதிக கவனிப்புமிக்க தொகுதியான நந்திகிராம் தொகுதியில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏனெனில், இங்குதான் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில், மம்தாவை எதிர்த்து, பாஜக வேட்பாளராக களமிறங்குபவர் சுவேந்து அதிகாரி நிறுத்தப்பட்டுள்ளார். இவர், மம்தா கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவியவர்.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட தயாரா? என்று மம்தாவுக்கு பாஜக சவால் விட்டிருந்தது. பொதுவாக, இத்தகைய சவாலை, பெரும்பாலான அரசியல்வாதிகள் ஏற்கமாட்டார்கள். ஆனால், மம்தா தைரியமாக ஏற்றுக்கொண்டார். இத்தொகுதியில், திரிணாமுல் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டன.

இத்தொகுதி, கடந்த 2007-08 காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி காலக்கட்டத்தில், நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக மிகவும் பிரபலமானது. இந்நிலையில், நாளை நந்திகிராமில் நடைபெறவுள்ள வாக்குப்பதிவு பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.