பனாஜி: கோவாவில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள், கட்சித் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம் என உறுதிமொழி ஏற்றதுடன், பத்திரத்திலும் கையெழுத்திட்டுள்ளனர்..

ஏற்கனவே கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ப.சிதம்பரம் முன்னிலையிலும், அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து செல்லப்பட்டு உறுதிமொழி வாங்கிய நிலையில், தற்போது ராகுல் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது.

40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் தற்போது பாஜக தலைமையிலான மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிப்ரவரி 14ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 10ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

இந்த தேர்தலில், கோவா முன்னணி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி  கூட்டணி அமைத்துள்ளது. மொத்தமுள்ள 40 சட்டசபை தொகுதிகளில், 37ல் காங்., போட்டியிடுகிறது. மீதமுள்ள மூன்று இடங்களில் கோவா முன்னணி போட்டியிடுகிறது.

ஏற்கனவே கடந்த தேர்தலின்போது, தேர்தலில் வெற்றிபெற்ற  10க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தனர். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, கடந்த கால கசப்பான அனுபவங்களால் தற்போது வேட்பாளர்களிடம் உறுதிமொழி பத்திரம் வாங்கியுள்ளது.

தேர்தல்  பிரசாரத்திற்கு வந்த ராகுல்காந்தி முன்னிலையில்,  காங்கிரஸ்  மற்றும் கோவா முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின், எக்காரணம் கொண்டும் கட்சி மாற மாட்டோம் என்றும், தலைமைக்கு விசுவாசத்துடன் செயல்படுவோம் என்றும் அனைத்து வேட்பாளர்களும் உறுதி ஏற்றனர்; அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரிடமும்  உறுதிமொழி பத்திரத்திலும் கையெழுத்து வாஙகப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் வேணுகோபால், கோவா தேர்தல் பொறுப்பாளர் சிதம்பரம், மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கோவா காங்., தலைவர் கிரிஷ் சோடன்கர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

கோவா சட்டமன்ற தேர்தல் 2022: வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம் என சத்தியம் செய்த காங்கிரஸ் வேட்பாளர்கள்…