டெல்லி: முதுநிலை நீட் தேர்வு 8 வாரங்கள் வரை ஒத்திவைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு மே 21ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் கல்வி ஆண்டில் MD, MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு வரும் மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. NBEMS இன் அதிகாரப்பூர்வ தளமான natboard.edu.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, பிப்ரவரி 4, 2022 எனவும் தேசிய தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.

ஆனால், அன்றைய தேதிகளில்  2021 ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருவதால், 2022-ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து,  மார்ச் 12 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் முதுநிலை தேர்வை 6 முதல் 8 வாரங்கள் வரை ஒத்திவைப்பதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை அறிவித்தது.

இந்த நிலையில், நேற்று இரவு, ஒத்தி வைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு  மே 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. natboard.edu.in என்ற இணையதளம் மூலம் மார்ச் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே.21 ஆம் தேதி தேர்வுக்கு மே 16ல் ஹால்டிக்கெட் வெளியாகும் நிலையில் ஜூன் 20ல் முடிவுகள் அறிவிக்கப்படும்.