பனாஜி: கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்யிடும் வேட்பாளர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம் என சத்தியம் செய்துள்ளனர். மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ப.சிதம்பரம் முன்னிலையில் இந்த உறுதியேற்பு நடைபெற்றது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் 21.01.2022 அன்று தொடங்குகிறது.  வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்31.01.2022 என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பிப்ரவரி 14ந்தேதி நடைபெற உள்ளது.

கோவாவில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி, முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. திரிணாமுல், தேசியவாத கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சித்து வருகிறது.  அதே வேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையில், ஆம்ஆத்மி கட்சியும் இடையில் புகுந்து, தேசிய கட்சிகளுக்கு பயத்தை காட்டி வருகிறது. அதுபோல பாஜக முன்னாள் முதல்வர் பாரிக்கரின் மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படாததால், அவர் தனித்து போட்டியிடுகிறார்.

இந்த பரபரப்பான சூழலில் அங்கு தேர்தல் களம் அனல்பறக்கத் தொங்கி உள்ளது. கோவாவில் ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பல காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜகவின்  குதிரை பேரத்தில் சிக்கி, பாஜகவுக்கு தாவிய நிலையில், தற்போது,  ‘‘வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம்’’ என்று காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை கடவுள் முன்பு சத்தியம் பண்ண வைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 24 எம்.எல்.ஏ.க்கள், அதாவது மொத்த எம்.எல்.ஏ.க்களில் 60 சதவீதம் பேர் கட்சி மாறி உள்ளனர். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு  2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த நிலையில், கோவாவில் முதற்கட்டமாக 34 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். வேட்பாளர்கள் அனைவரையும், கட்சியின் தலைவர்கள், ஒரு சொகுசு பேருந்தில் ஏற்றிச்சென்று,  பனாஜியில் உள்ள மகாலட்சுமி கோவிலுக்கு அழைத்து சென்று உறுதி மொழி வாங்கி உள்ளனர். கோவிலில் உள்ள மகாலட்சுமி முன்பு அவர்களை நிற்க வைத்து, ‘‘தேர்தலில் வெற்றி பெற்றால் கட்சி தாவ மாட்டோம்’’ என்று 34 பேரும் சத்தியம் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். அவர்களும் சத்தியம் செய்தனர். தொடர்ந்து,  பனாஜி அருகே ஒரு தேவாலயத்துக்கும், தர்காவுக்கும் அழைத்து செல்லப்பட்டு சத்தியம் செய்ய வைக்கப்பட்டனர். கோவா தேர்தலுக்கான காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ப.சிதம்பரமும் உடன் சென்றார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த செயலானது நகைப்புக்கு உரியதாகி உள்ளது. ஆனால்,  வாக்காளர்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்குவதற்காக இப்படி செய்ததாக மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சூடாங்கர் தெரிவித்துள்ளார்.