திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் சோழிங்கநல்லூரில் ஒரு பெண் தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற மாமன் மகனைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

 

திருவள்ளூர் மாவட்டம் சோழிங்கநல்லூரில் வசிக்கும் 19 வயதான இளம்பெண்ணிடம் 24 வயதாகும் அவரது மாமன் மகன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.  அதை ஒட்டி அந்தப் பெண்ணின் பெற்றோர் கண்டிக்கவே இரு குடும்பங்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.  அந்த இளைஞரை இரு குடும்பத்தினரும் கண்டித்துள்ளனர்.  ஆயினும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண் தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.  அப்போது அவரை வழி மறித்த மாமன் மகன் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.  அந்தப் பெண் திமிறவே அப்போது நடந்த கைகலப்பில் இளைஞரின் கத்தி கீழே விழுந்துள்ளது.  அந்த கத்தியை எடுத்த அந்தப் பெண் அவரை கழுத்திலும் முகத்திலும் கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.

அதன் பிறகு உடனடியாக காவல் நிலையத்துக்கு விரைந்த அந்த பெண் நடந்தவற்றைக் காவல் துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி காவல்துறை சூப்பிரண்ட் அரவிந்தன் காவல்நிலையத்துக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் விசாரணை செய்துள்ளார். சிறிதும் பதட்டமோ நடுக்கமோ இன்றி அந்தப் பெண் நடந்தவற்றைச் சொல்லி உள்ளார்.

இந்த தகவல் அறிந்த காவல்துறை சுப்பிரண்ட் இந்த விவகாரத்தில் விதி எண் 100 ஐ பயன்படுத்த எண்ணினார். இந்தியக் குற்றவியல் சட்டத்தில் விதி எண் 100 இன் படி தன்னை பலாத்காரம் அல்லது கொலையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஒருவர் யாரையாவது கொலை செய்ய நேர்ந்தால் இது கொலைக் குற்றமாகக் கருதாமல் விடுதலை செய்யலாம் எனவும் அவரை கைது செய்யத் தேவை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2012 ஆம் வருடம் மதுரையில் உஷா என்னும் பெண் பணியில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய போது தனது கணவர் அவர்கள் பதின்ம வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதைக் கண்டுள்ளார்.  அப்போது அவர் அதைத் தடுக்க முயன்ற போது கணவர் இவரைத் தள்ளி விட்டுள்ளார்.  இதனால் அவர் அருகில் இருந்த தனது மகனின் கிரிக்கெட் பேட்டால் கணவர் தலையில் அடித்து அவரைக் கொன்றுள்ளார்.  இந்த வழக்கில் இதே விதியின் கீழ் உஷா விடுதலை செய்யப்பட்டார்.

இதைப் போல் சிவகங்கையில் ஒரு 65 வயது மூதாட்டி தனது பேத்தியை பலாத்காரம் செய்ய முயன்ற தனது மகனைக் கொன்றுள்ளார்.  அப்போதும் இதே விதியின் கீழ் மூதாட்டி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவற்றை மனதில் கொண்டு அரவிந்தன் இந்த திருவள்ளூர் பெண்ணை கைது செய்யாமல் விதி எண் 100 இன் கீழ் விடுதலை செய்துள்ளார்.   இந்த விடுதலை குறித்து நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விரைவில் நீதிமன்றம் இந்த விடுதலையை உறுதி செய்யும் என அரவிந்தன் தெரிவித்துள்ளார்.