மெக்ஸிகோ, ருவாண்டா, ஹங்கேரி, சவுதி அரேபியா, அஜர்பைஜான், பஹரைன், கசகஸ்தான், மொரோக்கோ, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட எதேச்சதிகார அரசாங்கங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர்களையும் அரசியல், நீதித்துறை, பத்திரிகைத் துறையைச் சார்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசிகள் ஒட்டுகேட்க பயன்படுத்தப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதம மந்திரிகள் தவிர மொரோக்கோ நாட்டு அரசரின் தொலைபேசி உரையாடலும் ஒட்டு கேட்கப்பட்டிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன்

பெகாசஸ் ஸ்பைவேர் பட்டியலில், இடம் பெற்றிருக்கும் நபர்களில் மூவர் தற்போது அதிபர்களாக பதவி வகிக்கும் பிரான்ஸ் நாட்டின் இம்மானுவல் மக்ரோன், தென் ஆப்ரிக்காவின் சிரில் ராமபோசா மற்றும் ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் ஆகியோரின் தொலைபேசி தரவுகள் வேவு பார்க்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பௌலி, மொராக்கோவின் சாட் எட்டின் எல் உத்மானி ஆகிய தற்போதய பிரதமர்களும் லெபனானின் சாட் ஹரீரி, உகண்டாவின் ரஹுககான ருஹுன்டா மற்றும் பெல்ஜியம் நாட்டின் சார்லஸ் மிச்செல் ஆகியோர் பிரதமராக பதவிவகித்த போதும் உளவு பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் மொரோக்கோ மன்னர் ஆறாம் மொஹம்மதின் மொபைல் உரையாடல் மற்றும் வாட்ஸ்அப் தரவுகள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆராயப்பட்டுள்ளது.

உளவு பார்ப்பது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக மன்னர் காலம் தொட்டு நடைபெற்று வருவது தான் என்றபோதும், நவீன யுகத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு ஐபோனை ஸ்பை-போனாக மாற்றி ஒரு நாட்டு மன்னரின் அந்தரங்கங்களை கண்காணித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர மெக்ஸிகோ, புரூண்டி, கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் முன்னாள் அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் வருங்கால பிரதம மந்திரிகள் உள்ளிட்டோரின் எண்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது. 50,000 க்கும் மேற்பட்ட எண்கள் கொண்ட இந்த பட்டியலில், பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளின் எண்களும் இடம் பெற்றிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.