சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து  நீக்கப்பட்ட ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ, சிஎஸ்கே அணியின்  பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் (இன்று) வெளியேற்ற வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியல்கள் வெளியாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராபின் உத்தப்பா, டிவைன் பிராவோ, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஷ் ஜோர்டன், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன் ஆகிய எட்டு வீரர்களை வெளியேற்றியது.  இதில் பிராவோ வெளியேற்றப்பட்டது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் 4.4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட பிராவோ, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் திறமையான ஆடி வந்தார். அவர்  நீக்கப்பட்டது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டிவைன் பிராவோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளதாக சிஎஸ்கே தெரிவித்து உள்ளது.