சென்னை: சென்னையின் பிரதான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலை பெருங்குடி  குப்பை கிடங்கில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ இன்று 2வது நாளாக தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அந்த பகுதியை சூழ்ந்துள்ள கரும்புகையால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடுமையான சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வருகின்றனர்.

தென்சென்னையின் பிரதான குப்பை கிடங்காக பெருங்குடி குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கில்  பல ஆண்டுகளாக குப்பை கொட்டப்படுகிறது. இதனால், அங்கு, 34.02 லட்சம் கனமீட்டர் அளவில் குப்பை உள்ளது. இந்த குப்பை கிடங்கை நகரில் இருந்து மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஆட்சியாளர்கள் அதை கவனதில் கொள்வது இல்லை.

இந்த நிலையில்,  நேற்று மாலை பெருங்குடி குப்பை கிடங்கில் செயல்பட்டு வரும் மறுசுழற்சி செய்யும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அது, குப்பை கிடங்கு முழுதும் பரவி கொழுந்து விட்டெரிந்தது.காற்றின் வேகம் காரணமாக, தீயிலிருந்து வெண்புகை வெளியேறி சுற்று வட்டார பகுதிகளில் பரவியது. இதனால், அருகில் வசிப்போர் கண்ணெரிச்சல், மூச்சுத்திணறலால் கடும் அவதிக்குள்ளாகினர்.

தகவல் அறிந்து, துரைப்பாக்கம், மேடவாக்கம், ராஜ்பவன், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தீயணைப்பு வாகனங்கள் குப்பை கிடங்கிற்கு விரைந்தன. கொழுந்துவிட்டெரிந்த தீயால், இரவு வரை தீயணைப்பு வீரர்களும் கண்ணெரிச்சலால் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து தீ பரவாமல் இருக்க தேவையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு வரை தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றது. திறந்தவெளி என்பதாலும், சதுப்பு நிலத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும், தீ தொடர்ந்து பரவி வருகிறது.

 2-வது நாளாக இன்றும் நடைபெற்று வரும் தீ அணைப்பு பணியில் 135 தீயணைப்புதுறை வீரர்களும், குப்பை கிடங்கில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த 3 நாட்கள் ஆகும் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக குப்பை கிடங்கை சுற்றியுள்ள வேளச்சேரி குடியிருப்புகள், ராஜீவ் காந்தி ஐஐடி எக்ஸ்பிரஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால், சுவாசக்கோளறு ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். பலர் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.