சென்னை: பிரசாந்த் கிஷோர் தலைமை பிரச்சினைக்கு தீர்வு சொல்லவில்லை வெறும் ‘பிரசாந்த் கிஷோர் வெறும் டேட்டாக்களை மட்டுமே கொடுத்தார் என முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.

தேர்தல் வியூக வகுப்பாளரும், இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்‌ஷன் கமிட்டியின் (ஐ-பேக்) நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் வகையில், பல்வேறு யோசனைகளை காங்கிரஸ் கட்சியிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக சோனியா காந்தி உள்பட மூத்த தலைவர்களை 4 முறை சந்தித்து பேசினார். அப்போது, பல தகவல்களை கொடுத்ததாகவும், கட்சி தலைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால், பிரசாந்த் கிஷோரை தங்கள் கட்சியில் இணையுமாறு காங்கிரஸ் கட்சி அழைப்பும் விடுத்தது. ஆனால், அவர் கட்சியின் முக்கிய பதவி கேட்டதாகவும், அதற்கு காங்கிரஸ் தலைமை ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், அவர் காங்கிரஸ் கட்சியின் இணைய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில், அடுத்த ஆண்டு  நடைபெற உள்ள தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் டிஆர்எஸ் கட்சிக்கு வெற்றியை ஈட்டும் வகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் தெரிவித்த விளக்கத்தில்,  “காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் நிராகரித்தேன். நான் கட்சியில் இணைவதை விடவும் அமைப்பு சார்ந்த பிரச்சினைகளை சீர் செய்வது தான் மிகவும் அவசியம். கட்சிக்கு தலைமையும், ஒருங்கிணைப்பும் தேவை என நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரசாந்த் கிஷோர்  கட்சியின் தலைமை தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரசாந்த் கிஷோர் எவ்வித யோசனைகளையும் முன்வைக்கவில்லை. மாறாக அவர் வெறும் டேட்டாக்களை மட்டுமே கொடுத்தார் என்று விமர்சித்துள்ளார்.

அதேவேளையில் பிரசாந்த் கிஷோர் கொடுத்த தரவுகள் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது என்று கூறிய ப.சிதம்பரம் அதுபோன்ற தரவுகள் காங்கிரஸ் கட்சியில் கூட இல்லை என்பதை மறுக்க முடியாது  ஆனால் அவர்,  காங்கிரஸுடன் ஒப்பந்தம் போட்டபின்னரும் கூட திரிணமூல் காங்கிரஸ், டிஆர்எஸ், திரிணமூல் கட்சிகளுக்கும் பணியாற்றுவேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

மற்றொரு கேள்விக்கு பதில் கூறிய ப.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு  தலைவர் யார் என்பது ஆகஸ்ட் இறுதிக்குள் முடிவாகிவிடும் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், “பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா? என்பது முக்கியம் கிடையாது என்றும், கட்சியில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. எனவே, கட்சி செயல்பாட்டில் மாற்றம் வர வேண்டும். எனவே, பிரசாந்த் கிஷோர் கூறும் யோசனைகளை காங்கிரஸ் கட்சி அமல்படுத்த வேண்டும் அப்போதுதான் கட்சியில் மாற்றம் வரும்” என்று கூறியுள்ளார்.