ஐபிஎல் போட்டி நடத்தை விதிகளை மீறிய விராட் கோலி மற்றும் கெளதம் கம்பீர் இருவருக்கும் அவர்களது போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதமும் மற்றொரு வீரரான நவீன் உல் ஹக்-கிற்கு 50 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லக்னோ நகரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியின் விராட் கோலிக்கும் எல்எஸ்ஜி அணியின் வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

லக்னோ அணி வீரர்களுடன் கோலி வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் கண்ட எல்எஸ்ஜி அணியின் வழிகாட்டி கெளதம் கம்பீர் முண்டியடித்துக் கொண்டு கோலியுடன் சண்டை போட வந்தார் அவரை வீரர்கள் சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன் இருதரப்பு ரசிகர்களும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் போட்டி முடிந்து மைதானத்தை விட்டு வெளியே வந்த ஆர்சிபி வீரர்கள் எல்எஸ்ஜி வீரர்கள் ஒவ்வொருவருடனும் கைகுலுக்கிச் சென்றனர். விராட் கோலி வந்தபோது எல்எஸ்ஜி அணிக்காக விளையாடும் ஆப்கான் வீரர் நவீன் உல் ஹக், விராட் கோலியுடன் ஏதோ கூற அதுவாக்குவாதமாக முற்றியது.

இதனால் இந்த மூவருக்கும் ஐபிஎல் போட்டி நடத்தை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி-க்கு ரூ. 1.07 கோடி, கெளதம் கம்பீருக்கு ரூ. 25 லட்சம் மற்றும் நவீன் உல் ஹக்-கிற்கு ரூ. 1.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.