சென்னை:
முதலமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவையடுத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண் காவலர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு சில பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் இருக்கக் கூடிய பெண் காவலர்களுக்கும், ஆண் காவலர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அதிக பணிச்சுமை உள்ள பணிகளையோ அல்லது களத்திற்கு நேரடியாக சென்று பணியாற்றக் கூடிய பணிகளையோ ஒதுக்க வேண்டாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பெண் காவலர்களை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கவும், சாலைகளில் பெண் காவலர்களை நீண்ட நேரம் நிற்க வைக்க வேண்டாம் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி. திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே முதலமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.