சாயல்குடி: ராமநாதபுரம் அருகே சாயல்குடி அரசு பள்ளியின் கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கட்டிடம் உறுதித்தன்மை குறித்து புகார்கள் கூறியும், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தமிழ்நாட்டில் பள்ளி சுவர்கள் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியாவதும், காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே நெல்லையில் தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் கடுமையான விமர்சனங்களை எழுப்பிய நிலையில், அடுத்து மானா மதுரை அருகே பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து இரு மாணவர்கள் காயமடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இநத் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள வாகைக்குளம் அரசு தொடக்கப்  பள்ளியில் மேற்கூரையின் கட்டை கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டை தலையில் விழுந்ததில் நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் மற்றும் இரண்டாம்  வகுப்பு மாணவர் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் அருகே உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில்  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான பெற்றோர்கள் பள்ளியில் கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விபத்து நடைபெற்ற சாயல்குடி அரசு  தொடக்கப்பள்ளி 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், ஓட்டு கட்டிடமான அதன் கூரை வேயப்பட்டுள்ள மரங்கள் பழுதா இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக , ஏற்கனவே  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள்,  சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததாகவும், ஆனால்,கல்வி அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் தற்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிக் கட்டடங்களின் தரம்: மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமனம்