டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசோசியேடடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.  இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப்பெறவில்லை. தற்போது,  இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோரிடம் உள்ளது. பின்னர்,  2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது.

இதை எதிர்த்து, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் சொத்துக்களை அபகரித்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார். ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை,  காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.