டெல்லி: கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டு, வழக்குகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேதுசமுத்திர திட்டதை கைவிட மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்று நடைபெறும் கேபினட் கூட்டத்தில் முடிவு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது சேதுசமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவை பாக் ஜலசந்தி மற்றும் பால்க் விரிகுடா வழியாக இணைக்கும் புதிய கப்பல் பாதையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட சேதுசமுத்திரம் இந்தியாவின் மிக லட்சிய கடல்சார் திட்டங்களில் ஒன்றாகும்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும். இதனால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் வரை குறைவதுடன் கப்பல்களின் 30 பயண நேரம், எரிபொருள் சேமிப்பு ஏற்படும். மேலும் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகம் மேம்படுவதுடன், தூத்துக்குடி துறைமுகமும் தமிழகத்தின் தென்மாவட்டங்களும் வளர்ச்சி பெறும்.

இதற்கிடையில், சுப்பிரமணியசாமி, இந்து அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள் காரணமாக, சேதுசமுத்திரம் திட்டப்பணிகள் தடை ஏற்பட்டது.  இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால்,  மன்னார், பாக் ஜலசந்தி கடற்பகுதியில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும், கடலரிப்பு, மீன் இனங்கள் இடம் பெயரும் அபாயம் உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு ரீதியிலும் கருத்துகள் சேதுசமுத்திர திட்டத்திற்கு எதிரான கருத்துகளாக உள்ளன. மேலும் இராமர் கட்டிய பாலம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. சேதுசமுத்திர திட்டத்தினால் இந்த மணல் திட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தைக்கூறி சில இந்து அமைப்புக்கள் திட்டத்தை எதிர்த்து வருகின்றன.

இந்த சலசலப்புக்கு மத்தியில், சேதுசமுத்திரத் திட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுத்த முனைந்தது. கடந்த 2005 – ஜூலை 2ந்தேதி ரூ. 2,427 கோடி மதிப்பில்  சேது சமுத்திர திட்டப்பணிகள் மன்மோகன் சிங்கால்  மதுரையில் துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அதற்கானி பணிகள் 831.80 கோடி ரூபாய் செலவில், 2009ம் ஆண்டு வரை செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தாக்கல் செய்த மனுக்களை அடுத்து 2007ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் கட்டுமானம் உச்சநீதி மன்றத்தால் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய சேதுசமுத்திரம் கார்ப்பரேஷனை முடித்து வைப்பது குறித்து அமைச்சரவை இன்று பரிசீலிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்போது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் முழுப் பங்குகளையும் விற்க அரசாங்கம் தயாராகிவிட்டதால், அதற்காகத் தயாரிக்கப்பட்ட SPV-யை முறையாக முடிக்க வேண்டியுள்ளது. அதனால் சேதுசமுத்திரம் திட்டத்தை கைவிட மோடி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.