டெல்லி: மோடி ஆட்சியில் ‘நீதிகூட செல்வத்தை சார்ந்துள்ளது’  என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்தில் புனே அருகே  மதுபோதையில் 17 வயது சிறுவன் அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விவகாரத்தில் இரண்டு இளம் ஐடி பொறியாளர்கள் பலியாகினர். இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி, தனது எக்ஸ்தளத்தில் ராகுல்காந்தி விடியோ பதிவிட்டுள்ளார். அதில்,  நரேந்திர மோடி இரண்டு இந்தியாவை உருவாக்குகிறார் – அங்கு நீதியும் செல்வத்தை சார்ந்துள்ளது  என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,  “பேருந்து, லாரி, ஆட்டோ, ஓலா, யூபர் ஓட்டுநர்கள் தவறுதலாக விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், பணக்கார வீட்டு குழந்தை மதுபோதையில் காரை இயக்கி இருவரை கொலை செய்ததற்கு கட்டுரை எழுதுவது தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் தனித்தனியே இரு இந்தியா உருவாக்கப்படுகிறதா என்று மோடியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அனைத்து மக்களையும் ஏழைகளாக்க வேண்டுமா” என்று பதிலளித்தார். ஆனால், கேள்வி நீதியைப் பற்றியது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும். இந்த அநீதிக்கு எதிராகதான் நாம் போராடிக் கொண்டுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மதுபோதையில் 17 வயது சிறுவன் அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விவகாரத்தில் இரண்டு இளம் ஐடி பொறியாளர்கள் பலியாகினர். ஆனால், விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு மிக எளிய நிபந்தனைகளுடன் அன்றைய தினமே ஜாமீன் கிடைத்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது.  இந்த விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை தொழிலதிபர் விஷால் அகர்வால். சிறுவனை கைது செய்த காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பிரியாணி, பர்கர், பீசா போன்ற வகைவகையான உணவுகளை வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்த காணொலிகள் இணையத்தில் வைரலானது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிபந்தனைகளுடன் ஜாமீனும் கொடுக்கப்பட்டது. நிபந்தனைகளாக சாலை விபத்து குறித்து 300 பக்க கட்டுரை, சிறுவருக்கு ஆலோசனை போன்றவை விதிக்கப்பட்டது கடும் விவாதத்துக்கு உள்ளானது.

நீதிபதியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து 48 மணிநேரத்துக்கு பிறகு கைது செய்யப்பட்டார். சிறுவனுக்கு மதுபானம் அளித்த இரண்டு பார்களும் சீல் வைக்கப்பட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.