இந்தோனேசிய துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மதிப்பை இந்திய துறைமுகத்திற்கு வந்து இறங்கும்போது பலமடங்கு உயர்த்திக்காட்டி மோசடியில் ஈடுபடுவதாக அதானி நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று இந்திய வருவாய் புலனாய்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு அளித்துள்ளது.

இந்த நிலையில் திட்டமிட்ட குற்றங்கள், ஊழலை அம்பலப்படுத்தும் ஓசிசிஆர்பி (OCCRP) என்ற சர்வதேச அமைப்பு அதானி நிறுவன நிலக்கரி ஊழலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்காக 2014 ஜனவரி 9-ம் தேதி 69,925 டன் நிலக்கரியை அதானி நிறுவனம் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வந்தது.

2014 ஜனவரி முதல் அக்டோபர் வரை மட்டும் தலா 70,000 டன் நிலக்கரியுடன் 24 கப்பல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு அதிக விலைக்கு விற்றது தற்போது அம்பலமாகியுள்ளது

இந்தோனேசியாவில் ஒரு டன் ரூ.2330 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரி தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு டன் ரூ.7650-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிலக்கரியின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்காக பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், சிங்கப்பூர் வழியாக நிலக்கரி வந்ததாக ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்துள்ளதுள்ளதுடன் 24 கப்பல்களில் கொண்டு வரப்பட்ட ஒட்டுமொத்த நிலக்கரியும் தமிழ்நாடு மின்வாரியத்துக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.6,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது இதுகுறித்து ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் : நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் முறையீடு