சென்னை: அதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட சென்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து செய்து ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக எழுந்த புகார் எதிரொலி காரணமாக, சென்னை மாநகராட்சியில் 660 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன்மூலம்  ரூ43 கோடி இழப்புகள் தடுப்பு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்று கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது நடத்தை விதிமுறைகளை மீறி சென்னையில் 3,200 சாலைகள் புனரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மண்டல துணை ஆணையர்கள், பொறியாளர்களுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக ஆய்வு செய்ததில் 660 சாலைகள் தரமாக இருப்பதும் புனரமைப்பு தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து தரமான சாலைகளை செப்பனிட முறைகேடாக ஒப்பந்தம் வழங்கப்பட்ட 660 சாலைகளின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான சாலைகள் பேருந்துகள் செல்லாத உட்புற சாலைகள் ஆகும். இதனால் ரூ. 43 கோடி இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.