சென்னை

மிழகத்தில் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிகளில் இறைவணக்க கூட்டம், கலாச்சார நிகழ்ச்சிகளைத் தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் வைரஸ் தொற்று உலகெங்கும் பரவி வருகிறது.   இது வேகமாகப் பரவக் கூடும் எனக் கூறப்படுவதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அவ்வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை  இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “அனைத்து பள்ளிகளிலும் வேகமாகப் பரவும் ஒமிக்ரான் விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும். அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  சுழற்சி முறையின் கீழ் 1-8ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளிகளில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம். மேலும் பள்ளிக்குள் மாணவர்கள் நுழையும் போது அனைவருக்கும் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.   பள்ளி ஆசிரியர்கள் முகக் கவசம் அணிந்து,  மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.  இதைப் போல் மாணவர்களும் முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அனைத்து பல்லிகளிலும் நீச்சல் குளங்களை மூட வேண்டும்.  மேலும் இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாகத் தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது.” என உத்தரவிடப்பட்டுள்ளது.