சென்னை

மிழ் மொழித் தாளை தமிழக அரசுப் பணி தேர்வுகளுக்கு கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணி தேர்வுகளுக்கு அதிக அளவில் வெளி மாநிலத்தவர் பங்கேற்று பணிகளில் அமர்கின்றனர்.  இவர்களால் தமிழ் மொழியைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளதால் மக்களால் இவர்களை அணுகுவதோ குறைகளைக் கூறுவதோ மிகவும் கடினமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் தமிழக மனித வள மேலாண்மைத் துறைச் செயலர் மைதிலி கே ராஜேந்திரன் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளார்.

அந்த அரசாணையில், “கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசு துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்ய ஏதுவாக, அனைத்துவித போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் தகுதித் தேர்வாக நடத்தப்படும் என்று பேரவையில் கடந்த செப்.13-ம் தேதி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலர் வழங்கிய கருத்துருவின் அடிப்படையில், அனைத்து தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தகுதித் தேர்வைக் கட்டாயமாக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்படி, அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் இடம்பெறும். இதற்கான பாடத் திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் இருக்கும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறக் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெறவேண்டும்.

இனி டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ ஆகிய இரு நிலைகள் கொண்ட தேர்வுகளில், விரித்துரைக்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடத்தப்படும்.  மேலும் குரூப்-3, குரூப்-4 தேர்வுகளில் பொது ஆங்கிலம் நீக்கப்பட்டு, பொது தமிழ் மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக இருக்கும்.

இதைப்போல, ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட பிற தேர்வு முகமைகள் நடத்தும் அனைத்துவித போட்டித் தேர்வுகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும். ” எனக் கூறப்பட்டுள்ளது.