சென்னை

ரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது

அதிமுக தலைமை அக்கட்சிக்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருந்தது.   முன்னாள் எம் பி கே சி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்து நேற்று விசாரணை செய்தது.   விசாரணை முடிவில் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.  மேலும் இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக நிரூபிக்கப்பட்டால் இந்த தேர்தல் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தது.

எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இன்று மாலை 3 மணி வரை பெறப்படும் வேட்பு மனுக்கள் நாளைக் காலை பரிசீலனை செய்யப்பட உள்ளது.   வேட்புமனுக்களை 6 ஆம் தேதி மாலை வரை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்  இணைந்து வேட்புமனு தாக்கல்  செய்துள்ளனர். அவர்கள் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.