கொடைக்கானல்

பலத்த காற்றால் கொடைக்கானல் பாம்பே சோலா பகுதியில் ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகத் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.  மேலும் அவ்வப்போது பலத்த காற்றுட‌ன் கனமழையும் பெய்து வருகிறது. நேற்று காலை முதல் கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் பலத்த காற்று வீசியது.

இதனால் மாலை 6.30 மணியளவில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகே உள்ள பாம்பே சோலா பகுதியில் இருந்து ஆங்கிலேயர் கல்லறைக்குச் செல்லும் வழியில் இருந்த 2 ராட்சத மரங்கள், வேருடன் சாலையின் குறுக்கே விழுந்தன   இதையொட்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தவிர ராட்சத மரங்கள் சாய்ந்ததில், அப்பகுதியில் இருந்த மின் க‌ம்ப‌ம் உடைந்து சேதமடைந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இது குறித்துத் தகவலறிந்து வந்த கோட்டாட்சியர் முருகேசன் மரம் விழுந்த கிடந்த பகுதியைப் பார்வையிட்டு மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.