சென்னை: ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கடந்த 4ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார். அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில் அதை சட்டம் ஆக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தடையை மீறி ஆன்லைனில் சூதாடுவதற்கு ரூ.5000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில், சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகள் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்ற வருடம் ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியை தமிழகத்தில் பயன்படுத்த அரசு தடை விதித்து உள்ளது.

தடையை தொடர்ந்து, இன்று முதல் தமிழகத்தில் ட்ரீம் லெவன் செயலி செயல்படவில்லை. வங்கி கணக்கு வைத்திருப்போரும், தமிழகத்தில் வசிப்போரும் இனி ட்ரீம் 11 செயலியை பயன்படுத்த முடியாது.