இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த 13 நாட்களாக காசா மீது இஸ்ரேல் போர் வெறியுடன் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு எந்தவொரு உதவிப் பொருளும் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.

போரின் இடையே இஸ்ரேல் வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எகிப்தில் உள்ள ராஃபா வழியாக உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்கள் மனிதாபிமான அடிப்படையில் அனுப்பிவைக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இதுவரை ராஃபா கதவை எகிப்து திறக்கவில்லை.

இந்த நிலையில் காசாவில் சிக்கியுள்ள 20 லட்சத்திற்கும் அதிகமானோரை மேலும் நகரவிடாமல் தடுக்கும் வகையில் இந்த குறுகிய நிலப்பரப்பை இறுதிசைகளாகப் பிரித்து வடக்கு பகுதியில் உள்ளவர்களை தெற்கு நோக்கிச் செல்ல இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், காசா-வின் தெற்கே உள்ள கான் யூனுஸ் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கிருத்தவ தேவாலயம் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல் இதனால் காசாவின் எந்தவொரு இடத்திலும் பாலஸ்தீனியர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

அதேவேளையில், கடந்த ஒரு வாரமாக தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வரும் இஸ்ரேல் ராணுவத்தால் காசா எல்லையில் உள்ள ஹமாஸ் படையைத் தாண்டி முன்னேற முடியவில்லை.

மேலும், தரைவழி தாக்குதல் தொடர்ந்தால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இஸ்ரேலைச் சுற்றியுள்ள லெபனான், ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

போராட்டங்களை காரணமாக வைத்து, பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியான மேற்கு கரையிலும் லெபனான் எல்லையிலும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கள் கைவரிசையை காட்டத்துவங்கியுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பரவாமல் தடுக்கும் நோக்கத்தோடு இஸ்ரேல் வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நோக்கம் இதனால் கேள்விக்குறியாகி உள்ளது.

காசா-வுக்கு உதவிப் பொருட்களை அனுப்பவது மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை தணிக்கும் தனது முயற்சியில் அமெரிக்காவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா-வை ஹமாஸ் குழுவுக்கு இணையாக பேசி அமெரிக்க மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார்.

தவிர, உக்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு தாராளமாக ராணுவ உதவிகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தை நாடியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை இஸ்ரேல் – பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவருவதில் எந்தவகையில் உதவும் என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜோர்டான் பயணத்தை ரத்து செய்து யூ-டர்ன் போட்ட பைடன்… காசா நிலைமை மோசமனதை அடுத்து அமெரிக்காவின் பாச்சா பலிக்குமா ?