ஒட்டாவா

கனடா இந்தியாவில் இருந்து 41 தூதர்களைத் திரும்பப் பெற்றுள்ளது.

சமீப காலமாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார்.  இந்தியா இதற்கு பதிலடியாகக் கனடாவில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்கும்படியும், இனவெறி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் எச்சரித்தது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் கனடா நாட்டு தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி கனடாவுக்கு மத்திய அரசு எச்சரித்தது.  21 இந்தியத் தூதரக அதிகாரிகள் கனடாவில் பணியாற்றி வரும் நிலையில் இந்தியாவில் 62 கனடா தூதரக அதிகாரிகள் பணியாற்றி வந்தனர்.

எனவே தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 21 ஆகக் குறைக்கும்படியும், எஞ்சிய அதிகாரிகளை உடனடியாக திரும்பப்பெறும்படியும் கனடாவுக்கு மத்திய அரசு கெடு விதித்தது. இன்றைக்குள் அதாவது 20 ஆம் தேதிக்குள் தூதரக அதிகாரிகளை திரும்பப்பெறவில்லை என்றால் அவர்களின் தூதரக அந்தஸ்து பறிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்தது.

தற்போது இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளைக் கனடா திரும்பப் பெற்றுள்ளது. இந்த 41 தூதர்களும் குடும்பத்துடன் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் இந்தியாவில் உள்ள கனடா தூதர்களின் எண்ணிக்கை 21 ஆகக் குறைந்துள்ளது.

கனடா தூதர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் விசா உள்ளிட்ட செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது..

கனடா இந்தியாவில் இருக்கும் தங்கள் நாட்டுக் குடிமக்கள் கவனமுடன் இருக்கும்படி எச்சரித்துள்ளது. மேலும் இந்தியாவுக்குச் செல்லும் கனடா மக்களும் கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.