இஸ்ரேல் – பாலஸ்தீன போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவாமல் தடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றிரவு இஸ்ரேல் புறப்பட்டார்.

இந்த மாதம் 7 ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் போர் பிரகடனம் செய்த நிலையில் அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்கு நாலுகால் பாய்ச்சலில் வந்தது.

மேலும், 2000 அமெரிக்க துருப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர், இதனால் மத்திய கிழக்கு நாடுகளிலும் பாலஸ்தீன ஆதரவு நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. போர் தொடர்ந்து வரும் நிலையில் காசா பகுதி உலகத் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் அனைத்தும் இஸ்ரேலிய படையினரால் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்படுகின்றன.

இதனால் காசா பகுதிக்குச் செல்லவேண்டிய மனிதாபிமான உதவிகள் எதுவும் அங்கு செல்ல முடியாமல் தேங்கி நிற்பதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்குள் போர் பரவுவதற்கான சூழல் நிலவி வருகிறது.

இந்த சிக்கலைத் தவிர்க்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் புறப்பட்டார்.

இந்த நிலையில், காசா மருத்துவமனை மீது இன்று நடைபெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல் உலகையே உலுக்கி உள்ளது.

இஸ்ரேல் பயணத்தை தொடர்ந்து ஜோர்டான் சென்று ஜோர்டான் மன்னர், எகிப்து அதிபர் மற்றும் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீன குழுவினருடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தார்.

காசா மருத்துவமனை மீதான இந்த தாக்குதலை அடுத்து ஜோர்டானில் போராட்டம் வெடித்துள்ளதை அடுத்து தனது ஜோர்டான் பயணத்தை பைடன் ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தை தணித்து பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலியர்களின் நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பயணத்தின் மூலம் அமெரிக்க அதிபர் தான் நினைத்ததை சாதிப்பாரா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.