சென்னை: இஸ்ரேல்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசாவை சூறையாடி வருகிறத. காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம்  நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 500 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான யுத்தம்  இன்று 12வது நாளாக தொடர்ந்து வருகிறது. எல்லையில் 3 லட்சம் துருப்புகளை தயார் நிலையில் வைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக காசாவில் உள்ள அப்பாவி மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய  தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது, இது தொடர்பாக  ஹமாஸ் ஆதரவு பெற்ற இஸ்லாமிய ஜிஹாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேல் ராணுவம்தான் காசா மருத்துவமனை தாக்குதலை நடத்தியிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. காசா மருத்துவமனையில் கொடூரமான படுகொலையை நிகழ்த்தியிருக்கும் இஸ்ரேல் அதற்குப் பொறுப்பேற்காமல் தப்பிப்பதற்கு கடுமையாக முயற்சி செய்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது. அ

இதனிடையே ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளான காசா மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் காயம் அடைந்தவர்கள், மற்ற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சர்வதேச போர் சட்டங்களை மீறி இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்து வருவதாக கூறியுள்ள ஹமாஸ் அமைப்பு, காசாவில் மட்டும் இதுவரை 3,000த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதாக இஸ்ரேல் மீது  ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.

இது பயங்கரமான தாக்குதல் என்றும் கூறிள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரஸ் தெரிவித்துள்ளார். மருத்துவமனை தாக்குதலுக்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்று இஸ்ரேல் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியுள்ளார். காசாவில் உள்ள மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் ஏற்பட்டுள்ள பயங்கரமான உயிரிழப்புகளால் கோபமும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆனால்,  “இஸ்லாமிய ஜிஹாத் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் தோல்வி அடைந்து, காசாவில் உள்ள மருத்துவமனையைத் தாக்கியுள்ளது என உளவுத்துறை யின் பல ஆதாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது” என்று இஸ்ரேலிய ராணுவ ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார். ​​ இஸ்ரேல் மருத்துவமனைக்கு அருகில் எந்த வான்வழி நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும், பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலின் ராக்கெட்டுகள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் காசாவில் மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்லாமிய ஜிஹாத் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்துக்கு தொடர்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். “ஒட்டுமொத்த உலகமும் தெரிந்து கொள்ள வேண்டும். காசாவில் உள்ள காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள்தான் அங்கு உள்ள மருத்துவமனையைத் தாக்கியுள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்புப் படை அல்ல. எங்கள் குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்றவர்கள் தங்கள் குழந்தைகளையும் கொலை செய்கிறார்கள்” என்று நெதன்யாகு கூறினார்.

மருத்துவமனை தாக்குதலைத் தொடர்ந்து பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவு ஒன்றை நீக்கியது. நெதன்யாகு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் ஒளியின் குழந்தைகளுக்கும் இருளின் குழந்தைகளுக்கும் இடையே நடக்கும் போர் என்றும் மனித நேயத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் நடக்கும் போராட்டம் என்றும் கூறியதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தது.