திருவனந்தபுரம்: வயநாடு காங்கிரஸ் எம்.பி.யாக உள்ள ராகுல்காந்தி, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு  ரூ.50லட்சம்  செலவில் டயாலிஸ் கருவிகள் வழங்கினார். ஆனால், அதை கேரள மாநில அரசு ஏற்க மறுத்து விட்டது. இது தொடர்பான புகாரில் மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகத்திடம் அறிக்கை தாக்கல் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான டயாலிசிஸ் கருவி ஒன்றை வழங்கினார்.  பொதுமக்கள் நலன் கருதி  இந்த கருவியை  அவர் அரசு மருத்துவமனைக்கு வழங்கிய நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி தலைமையிலான மாநில அரசின் உத்தரவை ஏற்று, ராகுல் வழங்கிய டயாலிஸ் இயந்திரங்களை ஏற்க மருத்துவர்கள்  மறுத்து விட்டனர்.

தன்னுடைய எம்.பி நிதியில் கேரள மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேசன் சார்பில் டயாலிசிஸ் யூனிட் ஒன்றை மலப்புரம் வண்டூர் தாலுகா மருத்துவமனைக்கு ராகுல் காந்தி அனுப்பி வைத்தார். இந்த டயாலிசிஸ் கருவி கண்டெய்னர் லாரியில் வண்டூர் அரசு மருத்துவமனைக்க கொண்டுசெல்லப்பட்ட  நிலையில், அதை மருத்துவர்கள், மருத்துவமனையில்  வைக்க மருத்துவமனையில் இடமில்லை எனக்கூறி திருப்பி அனுப்பி உள்ளனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அங்கு வந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மருத்துவர்களுடன் வாக்குவாதம் நடத்தினார். மேலும்,   டயாலிசிஸ் கருவி திருப்பி அனுப்பப்பட்டதால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளானதாகவும் குற்றம் சாட்டினர்.

ராகுல்காந்தி அனுப்பிய டயாலிசிஸ் கருவியை திருப்பி அனுப்பிய மெடிக்கல் ஆபீசரை மாற்றவேண்டும் என மருத்துவமனையை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. வருகிற 17-ந் தேதிக்குள் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.